டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க், கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். தற்போது ட்விட்டர் என்ற பெயரையே ‘எக்ஸ்’ என்று மாற்றியுள்ளார். இந்தச் சூழலில், தற்போது மற்றொரு சமூக வலைதள நிறுவனமான மெட்டாவின் சி.இ.ஓ. மார்க் ஜூக்கர்பெர்க் ட்விட்டர் நிறுவனத்துக்குப் போட்டியாக மெட்டா நிறுவனத்தின் ‘த்ரெட்ஸ்’ செயலியை அறிமுகம் செய்திருக்கிறார்.
ட்விட்டர் போலவே, இதில் எழுத்துகள், புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட முடியும். இந்நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க்குடன் நேரலையில் சண்டையிட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். எலான் மஸ்குக்கும் ஜூக்கர்பெர்க்குக்கும் நீண்ட நாட்களாகவே மோதல் இருந்து வருகிறது. ஜூக்கர்பெர்க்குடன் கூண்டுக்குள் நேருக்கு நேர் சண்டையிட தயாராக இருக்கிறேன் என்று கடந்த ஜூன் மாதம் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த மோதலுக்கு தானும் தயார் என்று ஜூக்கர்பெர்க்கும் சம்மதம் தெரிவித்திருந்தார். தற்போது இருவரும் பல்வேறு கருத்துகளை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மார்க் ஜூக்கர்பெர்க் தனது திரெட்ஸ் பக்கத்தில் கூறுகையில், “எலான் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்பவர் இல்லை என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள முடியும் மற்றும் அதிலிருந்து வெளியேற வேண்டிய நேரம் இது. நான் அவருக்காக நேரம் ஒதுக்கினேன். டானா வைட் (அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்ஷிப்பின் தலைவர்), இதனை ஒரு தொண்டு நிறுவனத்தின் முறையான போட்டியாக மாற்ற முயற்சித்தார். ஆனால், எலான் தேதியை உறுதி செய்யவில்லை, பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை தேவை என்று கூறுகிறார். இதன் பிறகு, என்னை கொல்லைப்புறத்தில் பயிற்சியை மேற்கொள்ள சொல்கிறார். சரியான தேதிப் பற்றி எலான் எப்போதாவது தீவிரமாக எடுத்துக் கொண்டால், என்னை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இல்லையெனில், கடந்து செல்ல வேண்டிய நேரம். நான் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் நபர்களுடன் போட்டியிடுவதில் கவனம் செலுத்தப் போகிறேன்” என தெரிவித்து உள்ளார்.
இதனை செயின்ட் கிளேர் ஆஷ்லே என்பவர் ட்விட் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், ‘மார்க் ஜூக்கர்பெர்க்’ ஒரு சிக்கன் எனக்கூறி பதிலடி கொடுத்துள்ளார்.