2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. தற்போது, 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. எனது அடுத்த 5 ஆண்டுகால ஆட்சியில் நாடு உலகின் 3-வது பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுக்கும். இது நரேந்திர மோடியின் வாக்குறுதி என்பது பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனாவுக்குப் பிறகு, உலகத்தையே வழிநடத்தும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. மேலும், புதிய உலக வரிசை, புதிய புவிசார் அரசியலை உருவாக்கி வருகிறது. சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவை நாட்டை மாற்றி வருகின்றன.
இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து நீடிக்க நிலையான அரசு தேவை. ஆகவே, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான மற்றும் நிலையான அரசு தேவை என்று மக்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே, எங்களை 2-வது முறையாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை வீணாக்கவில்லை. நாங்கள் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, உலக பொருளாதாரத்தில் நம் நாடு 10-வது இடத்தில் இருந்தது. ஆனால், 140 கோடி மக்களின் முயற்சியால் தற்போது 5-வது இடத்திற்கு வந்து விட்டோம்.
இது எளிதாகவும், தானாகவும் நடக்கவில்லை. நாட்டை தனது பிடிக்குள் வைத்திருந்த ஊழல் அரங்கனை விரட்டிவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை வலுவான நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். அதேபோல, எனது அடுத்த 5 ஆண்டுகால ஆட்சியில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும். இது நரேந்திர மோடியின் வாக்குறுதி.
இது ஒருபுறம் இருக்க, கொரோனா தாக்கத்தில் இருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதோடு, ரஷ்யா-உக்ரைன் போர் மற்றொரு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தற்போது உலக பணவீக்கம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. நமது தேவைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும்போது, துரதிருஷ்டவசமாக பணவீக்கத்தையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. எனினும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
உலகின் மற்ற நாடுகளை விட, நமது நிலைமை சிறப்பாக இருக்கிறது என்பதற்காக நாம் திருப்தி அடைய முடியாது. பண வீக்கத்தின் சுமையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகும். அதேபோல, எல்லை கிராமங்கல் நாட்டின் கடைசி கிராமங்கள் என்று கூறினார்கள். அவை கடைசி கிராமங்கல் அல்ல, நாட்டின் முதல் கிராமங்கள். ஆகவேதான், எல்லை கிராமங்களைச் சேர்ந்த 600 பேரை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கச் செய்திருக்கிறோம்” என்று கூறினார்.