மத்திய அரசு நலத்திட்டங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொலையை, அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதன் மூலம், கடந்த 9 ஆண்டுகளில் 2.73 லட்சம் கோடி மிச்சப்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
தனியார் தொண்டு நிறுவனம் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், “ஜன்தன் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் நடைமுறையை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. அதேபோல, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ், 39.76 லட்சம் பேர் பிணை இல்லாக் கடன் பெற்றிருக்கிறார்கள்.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் எஸ்.சி., எஸ்.டி. பயனாளிகளுக்கு 7,351 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், மத்திய அரசின் ஓய்வூதியம், சம்பளம், வட்டி, மானியம் ஆகியவை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம், கடந்த 9 ஆண்டுகளில் 2.73 லட்சம் கோடி சேமிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் தற்போது பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவிருக்கிறது.
மேலும், மத்திய அரசின் கொள்கை காரணமாக, 308 ரூபாயாக இருந்த அலைபேசி டேட்டா செலவு, தற்போது வெறும் 9.94 ரூபாயாக குறைந்திருக்கிறது. இது தவிர, ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 11.72 கோடி கழிப்பறைகளையும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 3 கோடி குடியிருப்புகளையும் கட்டி இருக்கிறோம்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.