சர்வதேச அலைச்சறுக்கு ஓப்பன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜ் பாபு மூன்றாவது சுற்றுக்கும், மகளிர் பிரிவில் கமலி மற்றும் சுகர் சாந்தி இரண்டாவது சுற்றுக்கும் முன்னேறியுள்ளனர் ”
தமிழகத்தில் கோவளம் முதல் மகாபலிபுரம் வரை உள்ள கடல் பகுதியில் அலைச்சறுக்குப் போட்டி நடத்த ஏதுவாக அமைந்துள்ளது. அதனால் பல முறை இந்திய அளவில் அலைச்சறுக்குப் போட்டி நடந்து உள்ளது. ஆனால், இந்தியாவிலேயே முதல் முறையாகச் சர்வதேச அளவில் அலைச்சறுக்குப் போட்டி சென்னை மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது.
கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்த போட்டி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா தரப்பில் 16 வீரர்கள் உட்படத் தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
நேற்று நடந்த இரண்டாம் சுற்று ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் வீரர் ராபர்ட் மகலூனா, தொடரின் அதிகபட்ச ஒற்றை அலை மதிப்பெண்ணைப் பதிவு செய்துள்ளார். இந்திய வீரர்கள் 16 பேரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவராஜ் பாபு ஒருவர் மட்டுமே, நேற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மேலும், மகளிர் பிரிவில் இந்திய வீரர்களான சுகர் சாந்தி பானர்சே மற்றும் கமலி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.