அமிர்த காலமான 2047ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடகி விடும் அதற்குப் பிரதமர் மோடி கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டமும் காரணமாக இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாகப் புதன்கிழமை இரவு ஒடிசாவிற்குச் சென்றார். பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இன்று ரகுராஜ்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,
“சுதந்திர தினப் பெருவிழாவில் பிரதமர் மோடி விஸ்வகர்மா திட்டம் பற்றிப் பேசி இருந்தார். பாரம்பரியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்த இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கி உள்ளோம். விஸ்வகர்மா திட்டம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் இந்த சூழ்நிலையில் இதனைப் பற்றிப் பேச வேண்டும். அதுவும் வண்ணக் கலைஞர்கள் நிறைந்த ரகுராஜ்பூரில் பேசியே ஆக வேண்டும். அடுத்த மாதம் வரவுள்ள விஸ்வகர்மா தினத்திலிருந்து (செப்டம்பர் 17) இந்தத் திட்டம் அமலுக்கு வரவுள்ளது. இந்தியா 2047ம் ஆண்டு வளர்ந்த நாடாக மாறும் சூழலில், இந்தியாவின் வளர்ச்சிக்கு விஸ்வகர்மா திட்டமும் பெரும் பங்காற்றியிருக்கும்.
தனது நுண்ணறிவு மூலம் கற்சிலைகளை வடிப்பவர்களாக இருக்கலாம், ஓவியங்களை வரைபவர்களாக இருக்கலாம், பனை ஓலைகளைக் கொண்டு அழகழகான பொருட்களை உருவாக்குபவர்களாக இருக்கலாம். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே, பிரதமர் மோடியின் நோக்கம். நமது நாட்டின் மென்திறன் (soft skills) இத்தகைய கைவினைக் கலைஞர்களிடம் இருக்கிறது.
தச்சு வேலை, படகு தயாரிப்பு, இரும்புக் கொல்லர், ஆயுதங்கள் தயாரிப்பு, சுத்தியல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு, பூட்டுத் தயாரிப்பு, பொற்கொல்லர், மண்பாண்டக் கலைஞர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி தைக்கும் கலைஞர், கொத்தனார், கூடை – பாய் – துடைப்பம் – தேங்காய் நார் மூலம் கால் மிதியடி தயாரிப்போர், பொம்மை கலைஞர்கள், முடிதிருத்துவோர், பூ மாலை தயாரிப்பவர், சலவை தொழிலாளர், தையல் கலைஞர், மீன்பிடி வலை தயாரித்தல் ஆகிய 18 வகையான தொழில்கள் இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்த தொழிலாளர்கள் அனைவருமே பாரம்பரியமாகவோ அல்லது குரு-சிஷ்ய முறைப்படியோ ஏதேனும் வகையில் கற்றவர்களாகவே இருக்க முடியும். அவர்களுக்கு முறையான சான்றிதழ் கூட இருக்காது. அதனால் இந்தத் திட்டத்தின் கீழ்ப் பதிவு செய்வோர்க்குச் சான்றிதழுடன் கூடிய அடையாள அட்டைக் கொடுக்கப்படும் . மேலும் அவர்களுக்குத் தொழில் செய்ய 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அரசுக் கடன் உதவி, 5 சதவீத வட்டியில் வழங்கப்படும்.
இதனால் அவர்களுக்குச் சிறந்த திறனுடன் கூடிய தொழில் வளர்ச்சி ஏற்படும். ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த விஸ்வகர்மா திட்டம் கைவினைக் கலைஞர்களுக்கு மிகப் பெரிய நன்மையானதாக இருக்கிறது ” எனத் தெரிவித்தார்.
இதன் பின்னர், மணல் கலைஞர் சுதர்சன பட்நாயக்கின் மேரி மாதா மேரி தேஷ் கலை சிற்பத்தைப் பார்வையிட்டார். சுதந்திரப் போராட்ட வீரர் சஹீத் ஜெய் ராஜ்குருவின் பிறந்த இடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.