செம்மண் குவாரி மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம சிகாமணி மீது, அமலாக்கத்துறை அதிகாரிகள் 60 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். தற்போதைய தி.மு.க. அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர், கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, கடந்த 2007-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரி ஒப்பந்தத்தைத் தனது மகன் கௌதம சிகாமணி மற்றும் உறவினர்கள் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், சதானந்தன், லோகநாதன், கோதகுமார் உள்ளிட்டோருக்கு வழங்கினார்.
ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாகச் செம்மண் எடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, 2012-ம் ஆண்டு, இதுகுறித்த புகாரின் பேரில், சட்டவிரோதமாகக் கூடுதலாகச் செம்மண் எடுத்து அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உட்பட 8 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனிடையே, கடந்த 2021-ம் ஆண்டு மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, தங்கள் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால், அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதால், வழக்கை ரத்து செய்யவும் முடியாது, விசாரணைக்குத் தடை விதிக்கவும் முடியாது எனக்கூறி, அவரது மனுவைக் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக, கடந்த ஜூலை 17-ம் தேதி பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, கணக்கில் வராத 81.70 லட்சம் ரூபாய் ரொக்கம், 13 லட்சம் ரூபாய் வெளிநாட்டு கரன்ஸி ஆகியவற்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. மேலும், 41.90 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத்தொகையையும் முடக்கியது.
இந்த நிலையில், செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான வழக்கு நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் லோகநாதன் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், கௌதம சிகாமணி தவிர, பொன்முடி உட்பட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பொன்முடி மனுத் தாக்கல் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இந்த சூழலில்தான், பொன்முடி தவிர்த்து, கௌதம சிகாமணி உள்ளிட்ட 6 பேர் மீது 90 பக்க குற்றப்பத்திரிகையைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது. அமலாக்கத்துறையின் சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், இக்குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.