நியாயமான காரணமின்றிக் கணவனைப் பெற்றோரை விட்டுப் பிரிந்து வரும்படி மனைவி வற்புறுத்துவது கணவரைச் சித்திரவதை செய்வதற்குச் சமம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஒருவர் விவாகரத்து வேண்டி டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தார். அதில் தனது மனைவி பெற்றோரை மதிப்பதில்லை எனவும், சண்டையிட்டுத் தகாத முறையில் வாக்குவாதம் செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவாகரத்து தர மறுத்து விட்டது.
இந்நிலையில், அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைட் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு,
திருமணமான எந்தவொரு ஆணும் தனது பெற்றோரைப் பிரிய விரும்ப மாட்டார்கள். இந்த வழக்கில், பெற்றோரைப் பிரிந்து கணவன் மனைவியுடன் தனியாகச் செல்ல எந்த நியாயமான மற்றும் வலுவான காரணங்களையும் மனைவி குறிப்பிடவில்லை.
தனியாக வாழ வேண்டும் என்று விடாப்பிடியாக மனைவி வற்புறுத்துவது, கணவனுக்குச் செய்யும் கொடூரமான சித்ரவதை. திருமணம் முடிந்தவுடன் பெற்றோரைப் பிரிந்து வாழ்வது மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம். இந்தியப் பண்பாடும், கலாச்சாரமும் கூட்டுக் குடும்பம் தான்.
பெற்றோருக்கு வயதாகும் போது, அவர்களைக் கவனிக்க மகனுக்குத் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமை உள்ளது. முறையான வாதங்கள், காரணங்கள் இருந்தால் மட்டுமே, குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்து, மனைவியுடன் கணவன் வாழலாம். இந்த வழக்கைப் பொறுத்தவரை கணவன் மனைவி இருவருமே தொடர்ந்து தனித் தனியாக வாழ்ந்து வருவதால் விவாகரத்து கொடுக்கப்படுகிறது எனத் தீர்ப்பளித்தனர் .