சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியதை கொண்டாடும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த பெண் ஓவியர் ஒருவர், சந்திரயான் நிலவில் தரையிறங்கியது போன்று 5 அடியில் ரங்கோலி கோலம் வரைந்து அசத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பெண் ஓவியர் அறிவழகி, தேச தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களது உருவத்தை கோலமாவு கொண்டு ரங்கோலி கோலம் மூலம் தத்ரூபமாக வரைவது அவரது வழக்கம்.
மேலும், தேச பிதா மகாத்மா காந்தியடிகள், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி உள்ளிட்டோரின் உருவங்களையும் ரங்கோலியாக வரைந்து பலரதுப் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் தரையிறங்கி உலகச் சாதனை படைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஓவியர் அறிவழகி என்பவர் ரங்கோலி கோலம் வரைய முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார்.
இந்த நிலையில், 5 அடி நீலம், 5 அடி அகலத்தில் சந்திரயான் தரையிறங்கிய புகைப்படத்தை 2 கிலோ எடை கொண்ட கோலமாவைக் கொண்டு ரங்கோலி கோலத்தில் வரைந்து அசத்தியுள்ளார். பெண் ஓவியர் அறிவழகியின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.