திண்டுக்கல் இரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்வே நடைபாதைச் செல்லும் பகுதிக்கு முன்பு பொதுமக்கள் சிலர் தங்களுடைய இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களைத் தீ வைத்து எரித்தனர்.
இரயில்வே பாதுகாப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான காவலர்கள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இரயில்வே நடைபாதை அருகே புகை வருவதைக் கண்டு அப்பகுதிக்குச் சென்று பார்த்தனர்.
அப்போது இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதனை அணைக்க முற்பட்டனர். இருசக்கர வாகனங்களில் பரவிய தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இருந்த போதும் இருசக்கர வாகனங்களின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமானது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை தீவைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.