கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 960 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்ததால், கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாகவே தொடர்ந்து நீடித்தது.
இந்நிலையில் தற்போது கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 11 ஆயிரம் கன அடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 8,500 கன அடியாகக் குறைந்து வருகிறது.
இருப்பினும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. இந்த நீர்வரத்தைத் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் இருந்து மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து அமலில் உள்ளது.