உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இலகு ரக போர் விமானமான தேஜாஸ், நேற்று புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்த்ரா ஏவுகணை சோதனை முயற்சியை வெற்றிகரமாக முடித்திருக்கிறது.
பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, இராணுவத் தளவாடங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே தேஜாஸ் எனப்படும் இலகு ரக போர் விமானம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போர் விமானத்தின் மூலம் இலக்குகளைக் குறிவைத்து ஏவுகணை வாயிலாகத் தாக்குதல் தொடர்பாக பல்வேறு சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலக்குகளை குறிவைத்து துல்லியமாகத் தாக்கும் அஸ்த்ரா ஏவுகணை, தேஜாஸ் மூலம் நேற்றுச் சோதனை செய்யப்பட்டது. கோவை கடற்கரைக்கு அருகே 20,000 அடி உயரத்தில் பறந்தபடியே தேஜாஸ் போர் விமானம் அஸ்த்ரா ஏவுகணையை ஏவியது. இது, குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததின் மூலம் இந்தியா இன்னொரு மைல் கல்லை எட்டி இருக்கிறது. நேற்று சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கி, இந்தியா புதிய சகாப்தம் படைத்தது குறிப்பிடத்தக்கது.
தேஜாஸ் சோதனை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்டிருக்கும் பதிவில், “தேஜாஸ் போர் விமானத்தின் திறனை வெளிப்படுத்துவதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டது. மேலும், ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்காமல் உள்நாட்டிலேயே உருவாக்க முடியும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் ஏரோநாட்டிகல் வளர்ச்சி ஏஜென்சி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் சோதனை இயக்குனர் மற்றும் விஞ்ஞானிகளும், இந்திய ராணுவ விமான தகுதி மற்றும் சான்றளிப்பு மையத்தின் அதிகாரிகளும் இச்சோதனை ஏவுதலைக் கண்காணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அஸ்த்ரா ஏவுகணை அதிநவீன பி.வி.ஆர். வகையைச் சேர்ந்ததாகும். இது ஆகாயத்திலிருந்து போர் விமானம் மூலம் தாக்கக்கூடிய வான்வழி ஏவுகணையாகும், இது மிகவும் கடினமான சூப்பர்சோனிக் வான்வழி இலக்குகளைக்கூடத் திறனோடு எதிர்கொண்டு அழிக்கவல்லது. இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், இமராட் ஆராய்ச்சி மையம் மற்றும் டி.ஆர்.டி.ஓ.-வின் பிற ஆய்வகங்களால் கூட்டாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், நமது உள்நாட்டு தேஜாஸ் போர் விமானங்களிலிருந்து தாக்கக் கூடிய உள்நாட்டு அஸ்த்ரா பி.வி.ஆர். ஏவுகணை நரேந்திர மோடி அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (தன்னம்பிக்கை இந்தியா) திட்டத்தை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.