ரஷ்யாவுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் தனியார் இராணுவத்தின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரஷ்யாவின் ட்வெர் பகுதியில் பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், அதில் 10 பேர் உயிரிழந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியானது. இறந்த பயணிகளில் பிரிகோஜினும் ஒருவர் என்று ரஷ்ய விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில். உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ரஷ்ய இராணுவத்துடன் வாக்னர் என்ற தனியார் இராணுவத்தின் தலைவரான பிரிகோஜினும் ஆதரவாக நின்றார்.
இருப்பினும், இந்த ஆண்டு ஜூன் மாதம், ப்ரிகோஜின் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், ரஷ்யாவின் ஜனாதிபதி பதவியில் இருந்து புடினை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பெலாரஷ்ய அதிபர் லுகாஷென்கோ தலையிட்டு சரிசெய்தபிறகு, வாக்னரின் படைகள் ரஷ்ய அரசாங்கத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை. பிரிகோஜின் தனது படைகளைத் திரும்பப் பெற்றார். இந்த நிலையில் அவர் விமான விபத்தில் உயிரிழந்திருப்பதன் பின்னால் ரஷ்யாவின் சதி இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப் படுகிறது.
இதனிடையே இந்த விமான விபத்துக்கு, உக்ரைன் இராணுவமே காரணம் என்று ரஷ்ய குற்றம் சாற்றியுள்ளது.