பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 15ஆவது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.
கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பிரிக்ஸ் மாநாடு காணொலி காட்சி வாயிலாகவே நடைபெற்று வந்த நிலையில், நடப்பாண்டில் பிரிக்ஸ் மாநாடு நேரடியாக நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் முதல்முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்யா அதிபர் விளாடிமர் புடினை தவிர, மற்ற 4 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்றனர். ரஷ்யா சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார்.
பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சிறிது நேரம் பேசிக் கொண்டனர் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் தலைவர்கள் நடத்திய ஊடக சந்திப்பிற்கு முன்னதாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்தனர். அப்போது இருவரும் கைகுலுக்கி, சிறிது நேரம் தனியாக பேசினர். தென்னாப்பிரிக்க ஊடகங்கம் ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் இந்த காட்சிகள் வெளியாகியுள்ளன..
ஆனால், மோடி-ஜி ஜின்பிங் இடையேயான கருத்து பரிமாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இரு தரப்பில் இருந்தும் இதுவரை வெளியிடப்படவில்லை.எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது.
பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக, ஜோகன்னஸ்பர்க்கில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் குறித்து ஊகங்கள் கிளம்பின. ஆனால், அதனை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு தெரிவிக்கவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பரில் பாலியில் நடந்த ஜி20 மாநாட்டின் போது ஒரு இரவு விருந்தில் பிரதமரும் சீன அதிபரும் சிறிது நேரம் பேசிக் கொண்டனர்.
இந்தியா – சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருவதற்கிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இது மேலும் அதிகரித்துள்ளது. எல்லை பிரச்சினை தொடர்பாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனில்லை. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் உடன்பட சீனா மறுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சரச்சைக்குரிய பகுதிகளில் சாலைகள் அமைத்தல், ராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், பாலங்கள் அமைத்தல் போன்ற அத்துமீறல் செயல்களில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனிடையே, கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய இடங்களில் உள்ள சிக்கலை தீர்ப்பதில் கவனம் செலுத்தும் வகையில், இந்தியாவும் சீனாவும் ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 19ஆவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தியது. அதன்பின்னர், அந்த பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், மீதமுள்ள பிரச்சினைகளை விரைவாக தீர்க்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாகவும் கூட்டு அறிக்கை வெளியானது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது தென் ஆப்பிரிக்க பயணத்தின் போது, சீன் அதிபரை சந்தித்து எல்லை பிரச்சினை குறித்தும், இரு தரப்பு உறவு குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு தரப்பு பேச்சுவார்த்தை தற்போது வரை நடைபெறவில்லை. பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து நேரடியாக கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார்.