தமிழக பா.ஜ.க சார்பில் புதிதாக தொடங்கப்பட்ட 1008 பூத் கமிட்டிகளில் ஒரே நேரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும், பிரிவினைவாதிகளை அப்புறப்படுத்தும் வகையிலும், ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காகவும் பா.ஜ.க பாடுபட்டு வருகிறது. இதனால், பாதயாத்திரை உள்ளிட்ட கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களில் 9,497 வாக்குச் சாவடிகளில் ஏற்கனவே, 6,094 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேலும் பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, மேலும், 3,403 வாக்குசாவடிகளில் 1,008 பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி முடுக்கிவிட்டப்பட்டது.
புதியதாக 1,008 பூத் கமிட்டிகளில் அமைக்கப்பட்டிருப்பதைக் கொண்டாடும் வகையில், 1,008 பூத்களிலும் 1,008 கொடிக்கம்பங்களில் பாஜக கொடியேற்றும் நிகழ்ச்சி அனைத்து பூத்களிலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவளம் பகுதியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முதல் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.