வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக, மணிப்பூர் கலவர வழக்கை, அஸ்ஸாம் நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக, கூகி மற்றும் மெயிட்டி ஆகிய இரு சமூகத்தினரிடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இது, கடந்த மே மாதம் 3-ம் தேதி கலவரமாக வெடித்தது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, கூகி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணக் கோலத்தில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் காணொளி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மணிப்பூர் கலவரம் மற்றும் பெண் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.யும், மாநில போலீஸாரும் விசாரித்து வந்தனர். இந்த சூழலில், மணிப்பூர் வழக்குகளைக் கண்காணிக்கவும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்பார்வையிடவும், நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இக்குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பான அனைத்து வழக்கு விசாரணைகளையும் அஸ்ஸாம் மாநிலத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், கலவரம் தொடர்பான 17 வழக்குகளை சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேற்கண்ட வழக்குகளை விசாரிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளை நியமிக்குமாறு குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு நியாயமான வழக்கு விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்திருக்கிறது. மேலும், வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளைச் சிறையிலடைக்க உத்தரவிடுதல், காவலை நீட்டித்து உத்தரவிடுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் இவ்வழக்கு விசாராணைக்கென நிர்ணயிக்கப்படும் குவாஹாட்டி நீதிமன்றத்தில் இணையவழியில் (ஆன்லைன்) மேற்கொள்ளப்படும்.
போக்குவரத்துச் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு உள்ளிட்ட நடைமுறைகள் மணிப்பூரில் இருந்தபடியே மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதேசமயம், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் மற்றும் சி.பி.ஐ. வழக்குகளுக்கு தொடர்புடைய பிற நபர்கள், இணையவழியில் வழக்கு விசாரணையில் பங்கேற்க விரும்பாவிட்டால், குவாஹாட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகலாம். இந்த இணையவழி விசாரணைக்குத் தேவையான இணைய சேவைகளை மணிப்பூர் மாநில அரசு செய்துதரவேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கின்றனர்.