திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதியில் செல்லும் கூவம் ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டிப் பகுதியில் செல்லும் கூவம் ஆற்றில், இன்று காலை செடிகளுக்கு மத்தியில் அதிக அளவில் மீன்கள் செத்து மிதந்துள்ளது. இதனைக் கண்டு அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள அரசு அதிகாரிகளுக்கும், மீன்வளத்துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவேற்காடு நகராட்சி நிர்வாக அதிகாரிகள், கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் கேட்டோது, கூவம் என்ற இடத்தில் இருந்து தொடங்கும் நதியானது, திருவேற்காடு வரை நல்ல தண்ணீராகவே வருகிறது. பின்னர், பல்வேறு நீர் கலந்து கழிவு நீராக மாறிவிடுகிறது. கூவம் ஆற்றில் இரவு நேரங்களில் சிலர் குப்பைகளைக் கொட்டுகின்றனர். கழிவுநீரையும் விட்டு செல்கின்றனர். மேலும், தனியார் நிறுவனங்களில் இருந்தும் இரசாயனங்கள் கலந்த தண்ணீரையும் விடுகின்றனர். இதனாலே, கூவம் ஆற்றில் மீன்கள் செத்துப்போக காரணம் என்கின்றனர்.
தற்போது டன் கணக்கில் அங்கு மீன்கள் செத்து மிதப்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது. இதனிடையே, திருவேற்காடு – காடுவெட்டி செல்லும் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.