திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கோவில் திருவிழாவின் போது 300-க்கும் மேற்பட்டோர் ஒரே கலர் சட்டை, வேஷ்டி அணிந்து சுவாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் அருள்மிகு அய்யம்மாள் திருக்கோவில் ஆவணி திருவிழா நடைபெற்றது. இந்த விழா வருடத்தில் ஒரு நாள் இரவு மட்டுமே நடைபெறும். இந்த திருவிழாவில் அய்யம்மாள் திருக்கோவில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வது வழக்கம்.
வழக்கம் போல், இந்த ஆண்டு திருக்கோவில் பூசாரி அழைக்கப்பட்டு, மஞ்சள் ஆற்றுக்கு எடுத்துச் சென்று அங்கு கரகம் ஜோடிக்கப்பட்டு கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சின்ன கருப்பு அருவாள் மீது ஏறி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். திருவிழாவின் முக்கிய அம்சமாக அய்யம்மாள் திருக்கோவில் பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஒரே கலர் உடை அணிந்து திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் உள்ளவர்களை மிகவும் கவர்ந்தது.
திரும்பிய பக்கம் எல்லாம், பக்தர்கள் மஞ்சள் சட்டை மற்றும் சிகப்பு வேஷ்டி கட்டிக் கொண்டும், உடல் மற்றும் முகம் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டும், கையில் அரிவாள் ஏந்திக் கொண்டும், ஆட்டம் பாட்டத்துடன் திருக்கோவிலுக்கு வருகை தந்தனர். மேலும், வான வேடிக்கையுடன் வத்தலகுண்டு முக்கிய நகர் பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர். நிறைவாக, அய்யம்மாள் பக்தர்கள் திருக்கோவில் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில், ஆண்களுக்கு நிகராக அப்பகுதி பெண்களும் கலந்து கொண்டனர்.