இலாகா இல்லாத தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, செப்டம்பர் 15-ம் தேதி வரை காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்கிற கதையாக, இலாகா இல்லாத தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திரும்பிய பக்கமெல்லாம் சிக்கலாகவே இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்தார். இந்த விவகாரத்தில் மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறையினரும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினரும் தனித் தனியாக வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த சூழலில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதன் பிறகு, நெஞ்சுவலி, மருத்துவமனை, அறுவைச் சிகிச்சை என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி, ஒரு வழியாக ஜூலை 17-ம் தேதி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரை ஆகஸ்ட் 7-ம் தேதி காவலில் எடுத்த அமலாக்கத்துறை, 5 நாட்கள் விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்து ஜூலை 12-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 25-ம் தேதி அவரது நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், அவரது வழக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, கடந்த 25-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக செந்தில்பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை 28-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். நீதிமன்றக் காவல் இன்று நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு எப்படியாவது ஜாமீன் வாங்கி விட வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் தீவிர முனைப்புடன் இருந்தனர். ஆனால், செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டதும், அவரது காவலை செப்டம்பர் மாதம் 15-ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார். இதனால், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்களுக்கு கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நீதிபதியிடம் கூறினர். ஆனால், நீதிபதி ரவியோ, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது. ஆகவே, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அமலாக்கத்துறை தரப்பில் வழங்கப்பட்ட 150 பக்கக் குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. மேலும், அடுத்த முறை நீதிமன்றக் காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்தத் தேவையில்லை என்றும், காணொளி வாயிலாக ஆஜர்படுத்தினாலே போதும் என்றும் சிறைத்துறையினருக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.