உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களில் சமநிலை இருக்கும்போது லாபகரமான சந்தையை நிலைநிறுத்த முடியும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பி20 வணிக உச்சி மாநாட்டில் அறிவுரை வழங்கினார்.
ஜி20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, வணிகத் தலைவர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்கும் பி20 உச்சி மாநாடு கடந்த 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தேசியத் தலைநகர் டெல்லியில் நடந்தது. பி20 இந்தியா அறிக்கையில், ஜி20 உச்சி மாநாட்டில் சமர்ப்பிப்பதற்கான 54 பரிந்துரைகள் மற்றும் 172 கொள்கை நடவடிக்கைகள் அடங்கும். 55 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றிருக்கிறார்கள்.
இம்மாநாட்டின் இறுதி நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “சந்திரயான்-3 வெற்றிகரமாகத் தரையிறங்கியதின் மூலம், இந்த வெற்றியை இந்தியாவுடன் சேர்ந்து ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டம் ஒரு பொறுப்பான விண்வெளித் திட்டத்தை இயக்குவதற்கானது. இந்த கொண்டாட்டங்கள் இன்றைய பி20-ன் கருப்பொருளான பொறுப்பு, முடுக்கம், புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றைப் பற்றியது. மேலும், இது மனிதநேயம் பற்றியது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் பற்றியது.
ஆர்.ஏ.ஐ.எஸ்.இ. என்கிற பி20 கருப்பொருளில் “ஐ” என்பது புதுமையைக் குறிக்கிறது என்றாலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றொரு சிறப்புக்குறியது “ஐ”. ஜி20-ல் ஆப்பிரிக்க ஒன்றியத்தை நிரந்தர இடங்களுக்கு அழைக்கும்போது இதே பார்வைதான் இருந்தது. பி20-ல் கூட ஆப்பிரிக்காவின் பொருளாதார வளர்ச்சி ஒரு மையப் பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்த மன்றத்தின் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை இக்குழுவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா நம்புகிறது.
இங்கு எடுக்கப்படும் முடிவுகளின் வெற்றிகள் உலகளாவிய பொருளாதார சவால்களைக் கையாள்வதிலும், நிலையான வளர்ச்சியை உருவாக்குவதிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். கொரோனா தொற்றுநோய் பரஸ்பர நம்பிக்கையின் கட்டமைப்பை உடைத்தெறிந்தபோது, பரஸ்பர நம்பிக்கையின் பதாகையை இந்தியா உயர்த்திப் பிடித்து நம்பிக்கையுடன் நின்றது. 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்கி உலகின் மருந்தகம் என்கிற அந்தஸ்தை உயர்த்தி இருக்கிறது.
இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள், அதன் நடவடிக்கை மற்றும் பதிலில் காட்டப்படுகிறது. உலகலாவிய வணிக சமூகத்திற்கு இந்தியாவுடனான உங்களது நட்பு எவ்வளவு ஆழமடைகிறதோ, அந்தளவுக்கு இரு தரப்புக்கும் அதிக செழிப்பு கிடைக்கும். வணிகத் திறனை வளமாகவும், தடைகளை வாய்ப்புகளாகவும், முயற்சிகளை சாதனைகளாவும் மாற்ற முடியும். உலகளாவிய வளர்ச்சியின் எதிர்காலம், வணிகத்தின் எதிர்காலத்தைப் பொறுத்தது. உலகின் நம்பகமான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
ஜி20 நாடுகளின் வணிகங்களில் பி20 ஒரு வலுவான தளமாக உருவெடுத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேசமயம், நிலைத்தன்மை ஒரு வாய்ப்பாகவும், வணிக மாதிரியாகவும் இருப்பதால் உலகளாவிய வணிகத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டும். சிக்கனம் மற்றும் வாழ்க்கை முறை ஆகிய இரண்டின் கோணத்திலும் வெற்றி என்பது மாதிரியாக இருக்கும். பூமியின் நல்வாழ்வும் நமது பொறுப்பாகும். வாழ்க்கை முறை மற்றும் வணிகங்கள் இரண்டும் கிரகத்திற்கு சாதகமானதாக இருக்கும்போது, பாதி பிரச்சனைகள் குறையும்.
ஆகவே, சுற்றுச்சூழலுக்கேற்ப வாழ்க்கையையும், வணிகத்தையும் மாற்றியமைக்க வேண்டும். மேலும், வணிகத்திற்கான பசுமைக் கடன் கட்டமைப்பு இந்தியா தயாரிக்கிறது. இது கிரகத்தின் நேர்மறையான நடவடிக்கைகளை ஏற்படுத்தும். அதேபோல, ஒரு வணிகமாக நீண்ட காலத்திற்கு நமக்கு பயனளிக்கும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அமல்படுத்திய கொள்கைகளால் வெறும் 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டிருக்கிறார்கள். இந்த புதிய நடுத்தர வர்க்கமும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வேகம் கொடுக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, வர்த்தகம் மற்றும் நமது எம்.எஸ்.எம்.இ. சுய மைய அணுகுமுறை அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால், அதிகமான மக்களின் வாங்கும் திறனை மேம்படுத்துவதில் வணிகங்கள் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களில் சமநிலை இருக்கும்போது லாபகரமான சந்தையை நிலைநிறுத்த முடியும். இது எல்லா நாடுகளுக்கும் பொறுந்தும். அதேபோல, மற்ற நாடுகளை ஒரு சந்தையாக மட்டுமே நடத்துவது பலனளிக்காது. அது உற்பத்தி நாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கும்” என்றார்.