புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 3 “பாரதிய” மசோதாக்கள், சட்டமாகி நடைமுறைக்கு வந்தால் எந்த வழக்கும் இனி 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில், மேற்கு மண்டல கவுன்சிலின் 26-வது கூட்டம் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்தது.
இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலகத்தின் https://iscs-eresource.gov.in மின்வள வலைதளத்தை அமித்ஷா தொடங்கி வைத்து, இந்த இணையதளம் மண்டல கவுன்சில்களின் செயல்பாட்டிற்கு உதவும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டயூ தீவுகளின் நிர்வாகிகள், மேற்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய உள்துறை செயலாளர், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகத்தின் செயலாளர் மற்றும் மத்திய, மாநிலங்களின் துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மொத்தம் 17 பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதில் 9 பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. மீதமுள்ளவை தேசிய நலன் சார்ந்த பிரச்சினைகள் என்பதால் விவாதத்திற்குப் பிறகு கண்காணிக்கப்பட்டன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “நாட்டின் சந்திரயான்-3 திட்டத்தின் சமீபத்திய வெற்றிக்குப் பிறகு, ஒட்டுமொத்த உலகமும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (இஸ்ரோ) பாராட்டுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தனது தொலைநோக்குப் பார்வையால், இந்தியாவின் விண்வெளித் துறைக்கு ஒரு புதிய திசையை காட்டியது மட்டுமல்லாமல், 2030-ம் ஆண்டிற்குள் விண்வெளித் துறையில் உலகின் முன்னணிக்கு இந்தியாவை அழைத்துச் செல்வதற்கான ஒரு காலவரையறை திட்டத்தையும் கட்டமைப்பையும் உருவாக்கி இருக்கிறார்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “ஊட்டச்சத்து இயக்கம், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல் மற்றும் ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் நன்மைகளை ஒவ்வொரு ஏழைக்கும் கொண்டு செல்லுதல் ஆகிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 3 பிரச்சினைகளில் மண்டல கவுன்சில் உறுப்பு மாநிலங்கள் உணர்வுப்பூர்வமாக செயல்பட வேண்டும். அதேபோல, நாட்டு மக்களை பொருளாதாரத்துடன் இணைக்க கூட்டுறவுகள் மட்டுமே ஒரே வழியாகும். இதனால் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும்.
கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றத்தின் மூலம், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முக்கியமானப் பிரச்சினைகளில் மாநிலங்களிடையே ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க மண்டல கவுன்சில்கள் உதவுகின்றன. மாநிலங்களின் பொதுநலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து மண்டல கவுன்சில்கள் விவாதித்து பரிந்துரைகளை வழங்குகின்றன. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை முழு அரசு அணுகுமுறையுடன் தீர்ப்பதற்கும், அரசியலமைப்பின் உணர்விற்கு இணங்க இணக்கமான தீர்வை நம்புவதற்கும் மண்டல கவுன்சில் ஒரு முக்கியமான தளமாகும்.
மாநிலங்களுக்கு இடையேயும் மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையிலும் ஒரு நல்ல கூட்டாட்சி சூழலை மேம்படுத்தவும், பராமரிக்கவும், மண்டல கவுன்சில்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஆகியவற்றின் நிறுவனத்தை வலுப்படுத்துவதே அரசின் நோக்கம். உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலகத்தின் முன்முயற்சி மற்றும் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் ஒத்துழைப்பால் மட்டுமே இது நிகழ முடியும்.
நாடாளுமன்றத்தில் மோடி அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா மசோதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா உள்ளிட்ட 3 புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், எந்தவொரு வழக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. மேலும், இதன் விளைவாக 70% எதிர்மறை ஆற்றல் அகற்றப்படும் . ஆகவே, மேற்கண்ட சட்டங்களை செயல்படுத்தத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் திறனை உருவாக்க அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும்” என்றார்.