ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் “ஒரே நேரத்தில் தேர்தல்” நடத்துவது சாத்தியமா? என்பது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, தற்போது சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர, மாநில அரசுகள் கவிழும்போதும், கட்சித் தாவல், வேட்பாளர் மறைவு போன்ற காரணங்களாலும் இடைத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, மாநில சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும் நீண்ட கால இடைவெளியில் தேர்தல் நடந்து வருகிறது. இத்தேர்தல்களின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
உதாரணமாக, ஒரு மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்போது, மத்திய அரசு அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்கள், அம்மாநில மக்களுக்கு அமல்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.
அதேசமயம், ஒரே தேர்தலாக நடத்தினால் இதுபோன்ற குழப்பங்களும், இடையூறுகளும் தவிர்க்கப்படும். மேலும், பண விரயமும், நேர விரயமும் தவிர்க்கப்படுவதோடு, ஒரே தேர்தலாக நடத்தும் போது நிர்வாகத்திறனையும் மேம்படுத்த முடியும்.
இதன் காரணமாகவே,அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு முதல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.
இதற்கு மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவிவரும் நிலையில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” நடைமுறைக்கு சாத்தியமா? என்பது குறித்து ஆராய சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருக்கிறது.
குழுவின் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார். இக்குழுவின் உறுப்பினர்கள் யார்? யார்? என்பது பின்னர் அறிவிக்கப்படுபடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில், “வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடைபெறும்” என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்து,ஒரு மாதம் ஆவதற்குள் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டியிருப்பது “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற சட்ட மசோதாவை அமல்படுத்த பா.ஜ.க அரசு முடிவு செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
“ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேவையற்ற பீதியையும் அச்சத்தையும் உருவாக்குகின்றன. இத்திட்டம் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரைகள் வர வேண்டும். அதனடிப்படையில் ஆராய்ந்துதான் முடிவெடுக்கப்படும். மேலும், 1951 முதல் 1967-ம் ஆண்டுவரை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது” என்று கூறியிருக்கிறார்.
அதேபோல, “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பாக, நாடாளுமன்ற நிலைக்குழு, இந்தியத் தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், நிதி ஆயோக் ஆகியவை ஏற்கெனவே ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
















