தி.மு.க. அமைச்சர் பொன்முடி மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி மீதான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, கனிமவளத்துறையையும் தன் வசமே வைத்திருந்தார். அப்போது, அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் உறவினர்களுக்கு செம்மண் குவாரி அனுமதி அளித்தார். இந்த செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து 28 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. அரசு அமைந்தது. இதன் பிறகு, 2012-ம் ஆண்டு பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் உறவினர்கள் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், சதானந்தன், கோதகுமார், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமைச்சர் பொன்முடி மற்றும் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதைத் தொடர்ந்து, செம்மண் குவாரி முறைகேட்டில் கிடைத்த பணத்தை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகவும், இது தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட், 81.70 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாகவும், 41.90 கோடி ரூபாய் வங்கி நிரந்தர வைப்புத்தொகை ஆகியவற்றை முடக்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் தி.மு.க. எம்.பி. கௌதம சிகாமணி உட்பட 6 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது.
இந்த குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி அல்லி, மேற்கண்ட வழக்கை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்கு செப்டம்பர் 11-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஏற்கெனவே, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த, இலாகா இல்லாத தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கையும், முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.