சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் 24 மணிநேர கவுண்டவுன் தொடங்கியுள்ளது
இஸ்ரோவின் சந்திரயான் -3யின் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் 24 மணிநேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியது.
பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவுக்கு 40 நாட்களில் கடந்து சென்ற சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் இறங்கி, வெற்றிகரமாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை பற்றிய ஆய்வை, இதுவரை அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி ஆகிய நாடுகளே மேற்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியா சேர்ந்துள்ளது.
சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை செய்வதற்காக ,ரூ.423 கோடி செலவில் இஸ்ரோ உருவாக்கியுள்ள, சுமார் 400 கிலோ எடை கொண்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-57 ஏவுகணை மூலம் நாளை பகல் 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலம் முதலில் பூமிக்கு வெளியே புவி வட்டப்பாதையில் கொண்டுசென்று நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அதன்பிறகு, நீள்வட்டப்பாதையில் பூமியை சுற்றிவரும் ஆதித்யா எல்-1 விண்கலம், அதன்பிறகு சூரியன் நோக்கி நகர்த்தி செல்லப்படும்.
பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லெக்ரேஞ்சியன் புள்ளி 1’ என்பது தான் அதன் இலக்கு. அந்த இடத்தில்தான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசை நிலையாக இருக்கும்.
இந்த ஆதித்யா எல்-1 விண்கலம், 127 நாட்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ‘லெக்ரேஞ்சியன் 1’ புள்ளியில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அங்கு இருந்தபடிதான், சூரியன் பற்றிய ஆய்வுப்பணியை ஆதித்யா எல்-1 தொடங்க இருக்கிறது.
சூரியனில் இருந்து 14 கோடியே 85 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி இருந்தாலும், ஆதித்யா எல்-1-ல் இருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் சூரியனை அருகில் இருந்து பார்ப்பதுபோன்ற அற்புத காட்சியை வெளிப்படுத்தும்.
விண்கலத்தில் உள்ள 7 அதிநவீன கருவிகள், சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு உள்ளிட்டவைகளை துல்லியமாக ஆய்வு செய்யும்.
5 ஆண்டுகள் ஆயுட்காலமுடைய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனைப் பற்றிப் பல புதிய கண்டுப்பிடிப்புக்களை வெளியே கொண்டுவரும் என்று உலகமே எதிர்பார்த்து இருக்கிறது.