தேனி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்ட சிறைச்சாலையில் ஒரே அறையில் 17 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கிடைத்த தகவலின் பேரில், சிறைக் காவலர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்றனர். அப்போது, அங்கு மறைந்திருந்த கைதிகள் காவலர்களை திடீரெனத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச்சென்றனர்.
இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த இரண்டாம் நிலை சிறைக் காவலர் தங்கபாண்டி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இரு காவலர்கள் லேசான காயங்களுடன் தப்பினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து சோதனைச்சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டு இடுக்கி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தப்பியோடிய 17 கைதிகளின் புகைப்படங்களும் அதிகாரிகளுக்கு பகிரப்பட்டு, அவர்களைப் பிடிக்க எல்லைப் பகுதிகள் முழுவதும் தனிப்படை போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தேனி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து தப்பிய 17 கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுவதாக தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி தெரிவித்துள்ளார்.
















