தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி நூறு கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் ஆரம்பப் புள்ளி எங்கிருந்து தொடங்கியது என்பது பற்றி இனி பார்க்கலாம்….
சென்னை, தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் ஒரு புகார் அளிக்கப்பட்டது.
அதில், சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வந்த பி.டி அரசகுமார், தனக்குள்ள அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறினார் என குறிப்பிட்டனர்.
அவரது பேச்சை நம்பி, தமிழகம் முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகள் அவரிடம் பல கோடி பணம் கொடுத்ததாகவும், ஆனால், உறுதியளித்தபடி அனுமதி பெற்றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை பி.டி.அரசகுமார் ஏமாற்றி விட்டார் என்றும் புகார் அளித்தனர்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் டி.சி. இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, புகாருக்கு உள்ளான திமுக நிர்வாகியான பி.டி.அரசகுமாரை கடந்த ஜூன் 27ம் தேதி கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி வசூலிக்கப்பட்ட பணம் எங்கே சென்றது? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை விரிவுபடுத்தினர்.
இந்த வழக்கில் அடுத்த முக்கியத் திருப்பமாக, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புடைய சென்னை மற்றும் திருச்சியில் உள்ள இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த செப்டம்பர் 16ம் தேதி சோதனை நடத்தினர்.
திருச்சி தென்னூர் இல்லம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் நடைபெற்ற சோதனையின் போது, சொத்து ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், காசோலைகள் உள்ளிட்ட ஆவணங்களும், செல்போன்கள், மடிக்கணினிகள், பென் டிரைவ்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் இருந்த காலகட்டத்தில், பள்ளிகளுக்கான அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், அவரது பங்கு குறித்து விசாரணை தீவிரமடைந்தது.
இதுகுறித்து அன்பில் மகேஷ், முந்தைய அரசின் கல்வித்துறை தொடர்பான ஆவணங்களே கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்ததுடன், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
போலீஸார் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி வசூலிக்கப்பட்ட பணம், அதற்கும் தனக்கும் உள்ள தொடர்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விசாரணைக்குப் பிறகும், வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
இந்த வழக்கில், அன்பில் மகேஷின் பெயரைச் சேர்த்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம், கட்சி நிதி என்ற பெயரில் பெறப்பட்டதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, அக்டோபர் தொடக்கத்தில் அமலாக்கத் துறையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்க்க, அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
















