கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் 7வது நாளாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 921.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான கோதையாறு, ஆறுகாணி, பேச்சிப்பாறை, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோதையாறு, பரளியாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
குழித்துறை தடுப்பணை அருகே உள்ள சப்பாத்து பாலம் ஏழாவது நாளாகத் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், இருபுறங்களிலும் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி பொதுமக்கள் செல்லாத வகையில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும், ஆறுகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
















