‘ஆப்ரேஷன் டிரைடென்ட்’ மூலம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக மீண்டும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனை வாயிலாக, சர்வதேச வலையமைப்பு முறியடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
அண்மையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘2029ம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் பிரச்னையில் இருந்து நாடு முழுமையாக விடுவிக்கப்படும் என்றார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 23ம் தேதி, வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மிசோரமில் மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் சேர்ந்து, மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ‘ஆப்ரேஷன் டிரைடென்ட்’ என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஒரே நேரத்தில், 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை வாயிலாக, சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டதுடன், 12 லட்சம் ரூபாய் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தல்காரர்களின் 18 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும்,1,424 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.
இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை வாயிலாக, வடகிழக்கு மாநிலங்கள் பகுதியில் செயல்பட்ட, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட கும்பல், இந்தியா, மியான்மர், வங்கதேசம் எல்லைகளுக்கு இடையே, ‘டெத் ட்ரையாங்கிள் காரிடர்’ எனப்படும் ஆபத்தான சர்வதேச பாதை வழியாக பெருமளவில் போதைப்பொருட்கள் கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை, மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார். போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க, மத்திய அரசு நிர்ணயித்த உறுதியான இலக்கை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.
















