மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள அர்னாப் புயல் மிகத் தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் நாளை மிகத் தீவிரமான புயலாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து விசாகப்பட்டினம் – யானம் பகுதிகளுக்கு அருகில் கரையை கடக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ள வானிலை மையம், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
நாளை முதல் வரும் 30ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், வரும் 31ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்னாப் புயல் காரணமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதன் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அர்னாப் புயல் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















