தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத்தர 100 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
‘கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக்கூறி 100 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அன்பில் மகேஷுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதனிடையே வழக்கில் முன்ஜாமின் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அன்பில் மகேஷ்க்கு, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்யமூர்த்தி முன் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷை விசாரணைக்கு எடுக்க அனுமதிக்குமாறு காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. அதேநேரத்தில் அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
நள்ளிரவு 12.30 மணி வரை இரு தரப்பும் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
அதன்படி அன்பில் மகேஷை நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அடைக்கப்பட்டார்.
















