இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் நாட்டின் இளவரசர் மற்றும் இளவரசிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரச குடும்பத் தம்பதியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். இந்த அரசுமுறைப் பயணம், இந்தியா மற்றும் லீக்டன்ஸ்டைன் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது இந்தப் பயணத்தின் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
இதனிடையே லீக்டன்ஸ்டைன் நாட்டின் பட்டத்து இளவரசர் அலாய்ஸ் மற்றும் அவரது மனைவி பட்டத்து இளவரசி சோஃபி ஆகியோர், டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அரச குடும்பத் தம்பதியினர், பார்வையாளர்கள் பதிவேட்டிலும் கையெழுத்திட்டனர்.
இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திய இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
















