தமிழகத்தில் இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசியல் சுயலாபத்திற்காக எம்எல்ஏக்கள் பதவி விலகுவதால், இடைத்தேர்தல் நடத்த மக்களின் வரிப்பணம் வீணாவதாகக் கூறி கே. சுதன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், இடைத்தேர்தல் செலவினங்கள் தொடர்பான கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அடுத்து, வழக்கில் மத்திய அரசு, இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பதவி விலகிய முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.
















