சீனாவின் போர்க் கப்பல் சமீபத்தில் இலங்கைக்கு வந்து சென்ற நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டிற்கு 2 நாள் பயணமாக நாளை செல்கிறார்.
இந்தியா எவ்வளவுதான் உதவி செய்தாலும், சீனாவுக்கு சாதகமாகவே இலங்கை அரசு இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்புவில் உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு இலங்கை அரசு தாரை வார்த்திருக்கிறது. மேலும், சீனாவின் போர்க்கப்பல்களும், உளவுக் கப்பல்களும் இலங்கையில் நிலைநிறுத்துவதற்கு அனுமதி அளித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவின் “யுவான் வாங்-5” என்கிற உளவுக்கப்பல் ஹம்பந்தோடா துறைமுகத்தில் ஒருவாரம் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது, ஹம்பந்தோடா துறைமுகத்தில் இருந்தபடியே அக்கப்பல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சீனா “ஹையாங்-24” என்கிற போர்க்கப்பலை கொண்டு வந்து இலங்கையில் நிறுத்தியது.
இப்போது,வரும் அக்டோபர் மாதம் “ஷியான்-6” என்கிற ஆய்வுக் கப்பலை இலங்கையில் கொண்டு வந்து நிலைநிறுத்த சீனா திட்டமிட்டிருக்கிறது. இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று இந்தியத் தரப்பில் எவ்வளவோ வலியுறுத்தப்பட்டும், அதைப் பொருட்படுத்தாமல் இலங்கை அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த நிலையில்தான், இரண்டு நாள் பயணமாக மத்திய இராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை இலங்கைக்குச் செல்லவிருக்கிறார்.
இப்பயணத்தின்போது, இலங்கை அதிபரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனே ஆகியோரைச் சந்தித்துப் பேசும் ராஜ்நாத் சிங், உளவு மற்றும் போர்க்கப்பல் விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தைப் பதிவு செய்வார்
மேலும், இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் குறித்தும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்தும் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
அதேபோல, இலங்கையின் மத்தியப் பகுதியான நுவரெலியா மற்றும் கிழக்குப் பகுதியான திரிகோணமலை ஆகிய இடங்களுக்கு நேரில் செல்லும் ராஜ்நாத் சிங், தமிழக மக்களையும் சந்திக்கிறார்.
மேலும், இலங்கையில் இந்தியா செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கும் ராஜ்நாத் சிங், 3-ம் தேதி பயணத்தை நிறைவு செய்துவிட்டு இந்தியா திரும்புகிறார்.