இரட்டைக் கொலை வழக்கில் ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
பீகாரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.
கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, சரண் மாவட்டம் ஷப்ரா பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான பிரபுநாத் சிங், தனது ஆதரவாளர்களுடன் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில், தரோகா ராய், ராஜேந்திர ராய், ஸ்ரீமதி தேவி ஆகியோர் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர். இவர்களில் தரோகா ராய், ராஜேந்திர ராய் ஆகியோர் உயிரிழந்து விட்டனர். ஸ்ரீமதி தேவி படுகாயமடைந்தார். இதுகுறித்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர் தரப்பில் அளித்த புகாரின் பேரில் சரண் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபுநாத் சிங் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு பாட்னா விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாததாகக் கூறி பிரபுநாத் சிங் 2008-ல் விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே பாட்னா உயர் நீதிமன்றமும் 2012-ல் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில்தான் பிரபுநாத் சிங் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது.
மேலும், பிரபுநாத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்த உச்ச நீதிமன்றம், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த இழப்பீட்டுத் தொகையை பீகார் மாநில அரசும், குற்றவாளியும் சேர்ந்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.