பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 20-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 6, 7-ம் தேதிகளில் இந்தோனேசியா செல்கிறார்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்தோனேசியாவில் செப்டம்பர் 6 மற்றும் 7-ம் தேதிகளில், 20-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடும், 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் நடைபெறவிருக்கின்றன. இம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அழைப்பு விடுத்திருக்கிறார். இதன் பேரில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இந்தோனேசியா செல்கிறார்.
இந்த மாநாட்டில் ஆசியான் நாடுகளின் தலைவர்கள் 8 பேரும் கலந்துகொள்கிறார்கள். ஆகவே, பிரதமரின் இந்தோனேசிய பயணம், மேற்கண்ட 8 நாடுகளின் தலைவர்களுடன் பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள வாய்ப்பளிக்கும். அதேபோல, இந்தியா – ஆசியான் நாடுகளின் உறவுகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, எதிர்கால ஒத்துழைப்பின் நிலையைப் பட்டியலிடும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம், இந்தியாவில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. ஜி20 அமைப்பில் இந்தோனேசியாவும் ஒரு உறுப்பு நாடு. கடந்த ஆண்டு ஜி20 அமைப்புக்கு இந்தோனேசியாதான் தலைமை வகித்தது. அப்போது, பாலி தீவில் நடந்து உச்சி மாநாட்டில்தான், இந்தியாவுக்கான தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில், கடந்த 2018-ம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜகார்ததா சென்றிருந்தார். அப்போது, இந்தோனேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவைப் புதிய சகாப்தத்திற்குக் கொண்டு செல்வதற்காக, விரிவான மூலோபாய கூட்டுறவை ஏற்படுத்துவதன் மூலம், அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.