முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை என போற்றப்படுவது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.
இந்த திருக்கோவிலில் நடைபெறக் கூடிய விழாக்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருவிழாவில், ஆவணி திருவிழாவும் ஒன்று. இந்த விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.
தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நடைபெறும், இந்த ஆவணி திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தளி, வீதி உலா வருவது வழக்கம்.
ஆவணி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை, ஒரு மணிக்கு, திருக்கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் தரிசனம் நடைபெற்றது.
பின்னர், உதயமார்த்தாண்ட அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது, பக்தர்கள், முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பினர்.
இந்த நிலையில், இன்று, அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் திருக்கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, கொடி மரத்திற்கு பால், பழம், பன்னீர், திராட்சை, மஞ்சள், தயிர் உள்ளிட 16 வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், கொடிமரம் தர்பைபுல், ரோஜா உள்ளிட்ட மலர்கள், பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.