திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டி மேதகு தமிழக ஆளுநர். ஆர்.என். ரவிக்கு, பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, சுப்பிரமணியன் சுவாமி தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது, சனாதன தர்மத்தை, டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் ஆகியவற்றை ஒழிப்பதுபோல் ஒழிக்க வேண்டும், அதை எதிர்ப்பதைவிட, ஒழிக்க வேண்டும் என திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 ஏ, 153 பி, 295 ஏ, 298, 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர், தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியைச் சேர்ந்தவர், குறிப்பாக, அமைச்சராகவும் உள்ளார். இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். இவரது இந்த பேச்சு லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது.
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் உள்ள சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களிடையே அச்சம் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்.
மேலும், சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் களங்கப்படுத்துவது, அவர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சை விதைப்பது, வன்முறை மற்றும் கலவரங்களைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
எனவே, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, கிரிமினல் வழக்கு தொடர, சட்டப் பிரிவு 196-ன் படி உங்களது மேலான அனுமதி தேவைப்படுகிறது. எனவே, தாங்கள், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கவேண்டும் என அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுப்பிரமணியன் சுவாமியின் எக்ஸ் பதிவில், ” திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
மீண்டும் ஒருமுறை சனாதன தர்மத்தை உதயநிதி ஸ்டாலின் இழிவுபடுத்தினால், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர, ஏற்கனவே பல முக்கியதர்கள் மேதகு ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், சுவாமியின் கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.