சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும், சட்ட விதிகளின்படி இத்தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்திருக்கிறது. இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்து முடிந்திருக்கிறது. இக்கூட்டத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று, தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
அந்த வகையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் குமார், “அரசியலமைப்பு வழங்கியுள்ள விதிகளின்படி நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். அதுதான் எங்களது பணி.
மேலும், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால், எங்களால் 6 மாதத்திற்கு முன்பே தேர்தலை அறிவிக்க முடியும். அதேபோலதான் சட்டமன்றத்துக்கும் தேர்தலை முன்கூட்டியே அறிவிக்க முடியும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சிகளுக்கு தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்ட விதிகளின்படி இத்தேர்தல் நடத்தப்படும்” என்று கூறியிருக்கிறார்.