தமிழகத்தில் இருந்து ஏதாவது ஒன்றை ஒழிக்க வேண்டும் என்றால், அது நிச்சயமாக தி.மு.க.தான். காரணம், D.M.K. என்றால் Dengue, Malaria, Kosu என்று பொருள். ஆகவே, இந்த கொடிய நோய்களுடன் தி.மு.க.வை மக்கள் தொடர்புபடுத்துவார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இடதுசாரி அமைப்பு ஒன்று நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பற்றி எரிகிறது. இந்துக்களும், இந்து அமைப்புகளும் கடும் கண்டத்தைப் பதிவு செய்து வருகின்றன. தவிர, உதயநிதி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அவ்வளவு ஏன், உதயநிதி பேச்சுக்கு தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளே தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. மேலும், மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் உதயநிதியின் சனாதனம் பற்றிய பேச்சு குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, உதயநிதியின் பேச்சுக்கு உண்மையால் பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எனது மறுப்பு” என்று தலைப்பிட்டு, உதயநிதியின் பேச்சுக்கும், தி.மு.க.வுக்கும் பதிலடி கொடுத்து ஆங்கிலத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
“தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம். சனாதனம் தொடர்பாக உங்கள் மகன் பேசியதையும், அதை மறுத்து நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையையும், உங்கள் மகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையையும் பார்த்தோம். கடந்த 4 நாட்களாக நீங்கள் போடும் சண்டை தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.
அதேசமயம், நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து நீங்கள் பொய்களை பரப்பி இருக்கிறீர்கள். இதற்கு, பா.ஜ.க.வின் நிர்வாகியாக நான் பதிலளிக்க வேண்டியது எனது கடமையாகும். பாரதப் பிரதமர் மோடி இந்த நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் மிகவும் கடினமாகவும், நேர்மையாகவும் உழைத்து வருகிறார். தற்போதுகூட நாட்டின் நலனுக்காக இந்தோனேஷியா சென்றிருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்கட்டும்! சனாதன தர்மத்தைப் பற்றிப் பேசும் நீங்கள், உங்கள் கட்சியில் பட்டியலின சமூகத்தினருக்கும், பெண்களுக்கும் முதலில் சம உரிமை கொடுத்திருக்கிறீர்களா? 35 பேர் கொண்ட உங்களது தி.மு.க. அமைச்சரவையில் 3 பேர் மட்டுமே பட்டயல் சமூகத்தினர். அதேபோல, 2 பேர் மட்டுமே பெண்கள்.
ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 79 பேர் கொண்ட மத்திய அமைச்சரவையில் 20 பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், 11 பெண்களும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 5 பேரும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 52 பேர் கொண்ட அமைச்சரவையில் 9 பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த அடிப்படையில் பார்த்தால், நீங்கள் உங்களது கட்சியினருக்கே அரசியல் அங்கீகாரத்தையும், அதிகாரத்தையும் கொடுக்கவில்லை என்பது புலனாகிறது. அதேபோல, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நேர்ந்த கொடுமையை மறக்க முடியாது. காவல்துறையினரின் அத்துமீறல்களால் அப்பாவி தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்தனர்.
அப்போது, காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்கட்சியினரும், பொதுமக்களும் வலியுறுத்தியபோது, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்களது ஜாதியினர் வருத்தமடைவார்கள் என்று கூறி, கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல, இரட்டைக் குவளை முறை தமிழகத்தில்தான் மிகவும் தீவிரமாக இருந்தது.
அது மட்டுமா, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் தற்போதும்கூட, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் தேசியக்கொடி ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. ஆனால், சனாதன தர்மத்தில் இதுபோன்ற பாகுபாடுகள் கிடையாது. அப்படியே எங்காவது இருந்தாலும், அவற்றை மத குருமார்கள் பேசி சரி செய்தனர். அப்படிப்பட்ட சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உங்களது மகன் சொல்கிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த பல ஆண்டுகளாகவே தி.மு.க.வின் நாடகத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தேர்தல் வந்துவிட்டால், நீங்கள் அமராகவும், அமீராகவும், அந்தோணியாகவும் மாறுவீர்கள். அதேபோல ஆட்சிக்கு வந்த முதல் வருடம் சனாதன தர்மத்தை எதிர்க்கிறீர்கள். 2-வது வருடம் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். 3-வது வருடம் சனாதன தர்மத்தை கொடூரமாக வேரறுக்கு நினைக்கிறீர்கள். 4-வது வருடம் தி.மு.க. இந்துக்கள் கட்சி என்கிறீர்கள். தி.மு.க.வில் இருக்கும் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்கிறீர்கள். 5-வது வருடம் நாங்களும் இந்துதான் என்கிறீர்கள்.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று தி.மு.க. சொல்கிறது. ஆனால், சனாதன தர்மத்தை காப்போம் என்று நாங்கள் சொல்கிறோம். ஆகவே, வரும் தேர்தலில் சனாதன தர்மத்தை முன்னிறுத்தி தேர்தல் களத்தில் மோதிப் பார்ப்போம். தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழகத்தில் இருந்து ஏதாவது ஒழிக்கப்பட வேண்டும் என்றால், அது தி.மு.க.தான். எனவே, 2024 தேர்தலில் தி.மு.க. என்கிற கட்சி அழிந்துவிடும். இதை நான் சொல்லவில்லை, உங்கள் மகன் சொல்லி இருக்கிறார். D என்றால் டெங்கு, M என்றால் மலேரியா, K என்றால் கொசு. இனி வரும் காலங்களில் இந்த கொடிய நோய்களை மக்கள் தி.மு.க.வுடன் தொடர்புபடுத்தி பேசுவார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
மேலும், உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் சேர்ந்து 2 ஆண்டுகளில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக, முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதையும், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி செய்த ஊழலையும் அண்ணாமலை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
If something needs eradication from Tamil Nadu, it is the DMK.
D – Dengue
M – Malaria
K – KosuGoing forward, we are sure that people will associate these deadly diseases with DMK.
Here is my detailed rebuttal to TN CM Thiru @mkstalin avl’s press statement today. pic.twitter.com/sg6Pmp1nTv
— K.Annamalai (@annamalai_k) September 7, 2023