சனாதனம் குறித்து வெறுப்புப் பிரச்சாரம் செய்த திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆளுநரிடம் தமிழக பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
சென்னை ஆளுநர் மாளிகையில், தமிழக பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் செப்.07-ம் தேதி (இன்று) சந்தித்தனர். அப்போது, அவர்கள் ஆளுநரிடம் 2 கடிதங்களை வழங்கினர்.
இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, சனாதனத்தை ஒழிப்போம் என்று, உலகம் முழுவதும் வாழும் 130 கோடி இந்துக்களை புண்படுத்தும் விதமாக அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.
சனாதனத்தை ஒழிப்போம் என்பதே, இந்துக்களை ஒழிப்போம் என்று கூறுவதாகத்தான் அர்த்தம். இந்து தெய்வங்களை வணங்கும் நபர்களை எதிர்ப்போம், ஒழிப்போம் என்பதுதான் அதன் பொருள். தமிழகத்தில் உள்ள 8 கோடி இந்துக்களை ஒழிப்போம் என்றுதான் அதற்கு அர்த்தம்.
கடவுள் நம்பிக்கை நிறைந்த மாநிலம் தமிழகம். உலகத்துக்கே வழிகாட்டும் மாநிலமும் தமிழகம்தான். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த தமிழகத்தில் இருந்து கொண்டு, அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, அந்த உறுதிமொழிக்கு எதிராக உதயநிதி நடந்து கொண்டுள்ளார்.
இது வன்முறை என்ற நஞ்சை விதைக்கும் பேச்சு. எனவே, அமைச்சர் பதவி வகிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியில்லை. எனவே, அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எங்களது மாநிலத் தலைவரின் கடிதத்தை, ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்.
அதேபோல், இந்து சமய அறநிலையத்துறையில் இருப்பவர்கள் இந்துக்களாக இருக்கவேண்டும் என்று விதி உள்ளது. இந்து மதத்துக்கு எதிராகவோ, மத உணர்வுகளுக்கு எதிராகவோ செயல்படமாட்டேன் என்று அதிகாரிகள் உறுதிமொழி எடுக்க வேண்டும். அதிகாரிகளே உறுதிமொழி எடுக்கும்போது, அந்த துறையின் அமைச்சர் எவ்வளவு பொறுப்புள்ள நபராக இருக்க வேண்டும். இது அமைச்சர் சேகர் பாபுவுக்கு தெரியவில்லை.
சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபுவும் கலந்து கொண்டது தவறு. எனவே, சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்றார்.