பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு 2023-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தங்கச் சீட்டு வழங்கப்பட்டது.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கவுள்ளது.
இந்த நிலையில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கருக்கு பி.சி.சி.ஐ. தங்கச் சீட்டு வழங்கியுள்ளது. இந்த தங்கச் சீட்டை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா, வழங்கினார்.
இதுகுறித்து பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில், “எங்களின் ‘இந்திய ஐகானுக்கான கோல்டன் டிக்கெட்’ திட்டத்தின் ஒரு பகுதியாக பாரத ரத்னா ஸ்ரீ சச்சின் தெண்டுல்கருக்கு பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தங்கச் சீட்டை வழங்கினார். கிரிக்கெட்டில் சிறப்பு வாய்ந்த சச்சின் தெண்டுல்கரின் பயணம், பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. தற்போது அவர், 2023 ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு அங்கமாக இருப்பார்” என்று தெரிவித்திருக்கிறது.
இதற்கு முன்பு, பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இந்த தங்கச் சீட்டு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.