பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மறு விசாரணைக்கு எடுத்ததற்கு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து 14-ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று கூறி, உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்துக் குவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இவ்வழக்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இவ்வழக்கு வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், பொன்முடி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.
ஆனால், இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது, இவ்வழக்கு தொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்கும்படி கூறி நோட்டீஸ் பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, அமைச்சர் பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, “மேற்கண்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம்தான் மாற்றியது. ஆகவே, இவ்வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத்துறையையும் எதிர் மனுதாரராகச் சேர்த்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கவில்லை. அதேபோல, இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் முன்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையின் விளக்கத்தையாவது கேட்டிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.
மேலும், இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம்தான் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. இதை இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. அதோடு, தாமாக முன்வந்து விசாரணக்கு எடுக்கப்படும் வழக்குகளை, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதுதான் நடைமுறை. அவர்தான், அந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்.
ஆனால், இந்த வழக்கில் நடைமுறை வழக்கத்தைத் தாண்டி தலைமை நீதிபதியின் பார்வைக்காக மட்டுமே அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த வழக்கை இந்த நீதிமன்றமோ, நீங்களோ விசாரிக்க அதிகாரம் கிடையாது. எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும்” என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதா? என்பது குறித்து வரும் 14-ம் தேதி முடிவு செய்யப்படும் எனக் கூறி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையைத் தள்ளி வைத்தார்.