தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு விசாரணையின்போது, நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதி வேதனை தெரிவித்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நீண்டகாலமாக நடந்து வரும் பல்வேறு வழக்குகளில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இது ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி, அமைச்சர்கள் விடுவிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதையடுத்து, விடுவிக்கப்படும் அமைச்சர்கள் மீதான வழக்குகளை மறு ஆய்வு செய்ய, தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து வருகிறது.
அந்த வகையில், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் நீதிமன்றத்தால் தி.மு.க.வைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மறு ஆய்வு செய்வதாகக் கூறி, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
அதேபோல, தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக, தொடரப்பட்ட வழக்கில் இருந்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கையும் நீதிபதி வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. இந்த வழக்கை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை.
மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கைப் பொறுத்தவரை, விடுவிக்கக் கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில், சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்திருக்கிறது.
கீழமை நீதிமன்றங்களின் இத்தகைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று வேதனை தெரிவித்த நீதிபதி, “இந்த வழக்குகளின் மறு ஆய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாகப் பார்க்கிறார்கள். ஆனந்த் வெங்கடேஷ் தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.