எல்லை உட்கட்டமைப்பு பணிகளில் மூன்று ஆண்டுகளில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று இந்திய உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய சீன எல்லை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவ்வப்போது, எல்லையில் சீனா அத்துமீறுவதும், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து விரட்டுவதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே, எல்லை பிரச்சனைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, எல்லையின் உட்கட்டமைப்புகளைத் தொலைநோக்கு பார்வையுடன் மேம்படுத்தி வருகிறது.
இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு எல்லை பிரச்சனைகளைக் கண்டு கொள்ளவில்லை. அப்போது, சீனா தன்னுடைய எல்லை உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்திக் கொண்டது.
இதுகுறித்து, இந்திய எல்லை சாலைகள் அமைப்பின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி செய்தியாளர்களிடம் பேசும்போது,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, அசல் எல்லைக் கோட்டுப் பகுதியில் 3,488 கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் ஆக்கப்பூர்வப் பணியில் செயல்பட்டு வருகிறது.
இந்த, உட்கட்டமைப்பு வளர்ச்சி பணியில் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் சீனாவை, இந்தியா முந்தி விடும். கடந்த 2 முதல் 3 ஆண்டுகளில் ரூபாய் 11 ஆயிரம் கோடி மதிப்பிலான 295 திட்டப் பணிகள் நிறைவடைந்து உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எல்லைப் பகுதிகளில் உட்கட்டமைப்புக்கான வளர்ச்சி பணிகளில் இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளின் நிதி விடுவிப்பு பற்றி அவர் ஒப்பிட்டுப் பேசினார்.
அப்போது அவர், இந்தியாவுக்கு முன்பே ஒரு தசாப்தத்திற்கு முன், அசல் எல்லைக் கோட்டுப் பகுதி முழுவதும் சீனா அதன் உட்கட்டமைப்புக்கான வளர்ச்சி பணிகளைத் தொடங்கி விட்டது.
ஆனால், தற்போதுள்ள அரசு, தனது எண்ணம் மற்றும் கொள்கையை மாற்றி உள்ளது. எங்களுக்கு ஆதரவளித்து உள்ளது. அனைத்து வித வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றுடன் பணிகளை முடிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.