ஞானவாபி மசூதியில் மேலும் 4 வாரங்கள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்துக்களின் புண்ணிய பூமியாகக் கருதப்படும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதன் எதிரே ஒளரங்க சீப் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இஸ்லாமியர்களின் ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதியின் சுற்றுச்சுவரில் சிருங்கார கௌரி அம்மன் சிலை அமைந்திருக்கிறது. இச்சிலையை நாள்தோறும் வழிபட அனுமதி அளிக்கக் கோரி 5 இந்துப் பெண்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் ஞானவாபி மசூதிக்குள் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இத்தனை ஆண்டுகளாக இதற்காகத்தான் காசி விஸ்வநாதர் கோவிலில் நந்தி பெருமான் காத்திருக்கிறார் என்று கூறிய இந்துக்கள், சிவலிங்கத்தை கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு உட்படுத்தக் கோரிக்கை விடுத்தனர். இதற்கு, மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மசூதி நிர்வாகம் அலகபாத் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், வாரணாசி நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. எனவே, மசூதி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதுவும் பலனளிக்காத நிலையில், வாரணாசி நீதிமன்ற உத்தரப்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி முதல் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த ஆய்வுக்கு 4 வார காலம் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 8 வார காலம் அவகாசம் கோரி, தொல்லியல் துறைத் தரப்பில் கடந்த 2-ம் தேதி வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், தொல்லியல் துறைக்கு மேலும் 4 வார காலம் அவகாசம் வழங்கி அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி, தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி அக்டோபர் 6-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.