தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மரம் வளர்ப்பை அதிகரிக்க, ஹெலிகாப்டர்கள் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி இராமநாதபுரம் அருகே உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் நடைபெற்றது.
இராமநாதபுரம் அருகே உச்சிப்புளி ஐ.என்.எஸ். தளம், பருந்து கடற்படை விமானத் தளம், மாவட்ட வனத்துறை, மாதா அமிர்தானந்தமயி மடம் ஆகியவை இணைந்து இராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளில் 4 இலட்சம் விதைப்பந்துகளைத் தூவுவதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, இந்தியக் கடற்படையின் தமிழகம் மற்றும் புதுச்சேரி கமாண்டர் ரவிக்குமார் திங்ரா தலைமை வகித்தார்.
இதற்கான விதைப்பந்துகளை அமிர்தானந்தமயி மடத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணா நந்தாபுரி வழங்கினார். விதைப்பந்துகள் அனைத்தும் 2 ஹெலிகாப்டர்களில் ஏற்றப்பட்டு தயாராக இருந்ததது. இதனைப் பிராந்திய கடற்படை அதிகாரி ரவிக்குமார் திங்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வனப்பகுதியில் பாம்பன், தங்கச்சி மடம் பகுதி தீவுகளில் காடுகள் அடர்த்தி குறைந்த பகுதிகளில் வேம்பு, புளி, நாவல், புங்கன் மர விதைகள் தூவப்பட்டன.
நேற்று, 40,000 விதைப்பந்துகள் தூவப்பட்டதாகவும், மீதமுள்ள விதைப்பந்துகள் மழைக்காலங்களில் தூவப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், உச்சிப்புளி ஐ.என்.எஸ். தள அதிகாரி விக்ராந்த் சப்னிஸ், அமிர்தானந்தமயி மடத்தைச் சேர்ந்த பிரம்மச்சாரினி பவானி, மாத்ருகிருபா மிருதசைதன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.