தி.மு.க. அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், தன்னையும் ஒரு மனுதாரராகச் சேர்த்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிம வளத்துறையையும் தனது வசம் வைத்திருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூந்துறை கிராமத்தில் அனுமதியை மீறி 2,64,644 லோடு லாரிகள் செம்மண் எடுத்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு 28,36,40,600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில், கடந்த 2012-ம் ஆண்டில் அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 67 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். 11 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் 9 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், செம்மண் குவாரி முறைகேட்டில், பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சாட்சிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு, 10-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் பலர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள் எப்படி சாட்சி சொல்வார்கள்? எனவே, அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.