திருப்பூர் அருகே உள்ள அருள்மிகு திருமுருகன் பூண்டி திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கும் அதிகமாக ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோரி, இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
திருப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருமுருகன் பூண்டி. முருகனால் இத்தலத்துச் சிவபெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், திருமுருகநாதர் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் தெற்கு நோக்கி சுப்ரமணிய சுவாமி அமர்ந்திருப்பது இத்தலத்துத் தனிச்சிறப்பாக காணப்படுகிறது. இதற்குச் சான்றாக, முருகன் சன்னதியில் லிங்கம் ஒன்றும் அமைந்துள்ளது.
முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு, திருக்கோவிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் தனது வேலை ஊன்றி, அருகிலேயே மயில் வாகனத்தையும் நிறுத்தி வைத்தார். இதனால் வேலும் மயிலும் இல்லாமல், தனித்து நிற்கிறார் என்பது திருக்கோவிலின் தனிச்சிறப்பு. பெரும்பாலான திருக்கோவில்களில், சுப்பிரமணியர் சிலை, முன்புறம் 3 முகங்களும், பின்புறம் 3 முகங்களுடனும் அமைந்திருக்கும். ஆனால், இங்கு மட்டும் 5 முகங்கள் முன்புறமும், 6-வது முகம் பின்புறமும் அமைந்துள்ளது.
இதனை, அதோ முகம் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த முகத்தைக் கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு, அதோ முகத்தைப் பார்த்தால், மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்திருக்கோவிலுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகவே, திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்தை அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, நிலத்தை மீட்கக் கோரி, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் பக்தர்களிடமும், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த முயற்சிக்கு ஆன்மீக அன்பர்களும், பக்தர்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.