ஜி20 உச்சி மாநாட்டில் டெல்லி பிரகடனம் வெற்றியடைந்ததற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டி இருக்கிறார். சந்தேகத்திற்கிடமின்றி இது இந்தியாவுக்கு ராஜதந்திர வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஜி20 அமைப்புக்கு இந்தாண்டு இந்தியா தலைமை வகித்திருந்தது. இதையொட்டி, கடந்த சில மாதங்களாக ஜி20 அமைப்பின் பல்வேறு பிரவுகளின் சார்பில் 200 கூட்டங்கள் நடைபெற்று முடிந்தன. நிறைவாக, ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டிருப்பதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஐ.நா. அமைப்பின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளருமான சசி தரூர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த சசி தரூர், “ஜி20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளாலும் ஏகமனதாக ஏற்கப்பட்டிருப்பது சந்திகத்திற்கிடமின்றி இந்தியாவுக்கு இராஜதந்திர வெற்றியாகும்.ஏனெனில், தலைவர்கள் டெல்லிக்கு வரும் வரை, கூட்டு அறிக்கைகூட இருக்குமா என்பதில் கணிசமான சந்தேகம் இருந்தது.
அதேபோல, உக்ரைனில் ரஷ்யப் போரைக் கண்டிக்க விரும்புபவர்களுக்கும், ரஷ்யா மற்றும் சீனாவை ஆதரிக்கும் நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியைக் குறைத்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது சாத்தியமற்றதாகத் தோன்றியது. ஆனால், அரசாங்கம் மிகவும் புத்திசாலித்தனமான செயல்பட்டு டெல்லி பிரகடனத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியது இராஜதந்திர வெற்றியாகும். இது இந்தியாவின் பெருமைக்கு மிகவும் முக்கியமானது மற்றும் வெற்றியாக வகைப்படுத்தலாம்” என்ற கூறியிருக்கிறார்.