ராமநாதபுரத்தில் கட்டுக்கட்டாக தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட தணிக்கை ஆவணங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 1:30 மணிக்கு பாரதி நகர் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்தன. இவைஅனைத்தும் காற்றில் பறந்தன. இதனை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இவற்றில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் குத்தகைக்கு விடப்பட்ட ஆவணங்கள், நுாறு நாள் வேலை திட்டத்தில் 2020–21 சமூக தணிக்கை செய்யப்பட்ட ஆவணங்கள் என பல்வேறு இருந்தன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, ” அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் இரு மூடைகளில் இந்த ஆவணங்களை எடுத்து சென்றார். அதில் ஒரு மூடை தவறி கீழே விழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரை பொதுமக்கள் சத்தமிட்டு அழைத்தனர். அவர் காதில் வாங்காமல் சென்றுவிட்டார். அரசுத்துறை ஆவணங்களை பாதுகாப்பின்றி எடுத்துச் சென்றது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.