திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் பலியானார்கள். விபத்தில் பலியானவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணமும் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ளது ஓணாங்குட்டை கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் 45 பேர், கடந்த 8-ம் தேதி 2 வேன்களில், கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவுக்குச் சுற்றுலா சென்றனர்.
2 நாள்கள் சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று இரவு ஊர் திரும்பியுள்ளனர். அதிகாலை, பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அடுத்துள்ள சண்டியூரில் வேனின் டயர் பஞ்சரானது. இதனால், சாலையில் ஒரு பக்கமாக வேனை நிறுத்தி, வேன் ஓட்டுநர் அதனைச் சரி செய்து கொண்டிருந்தார்.
வேனிலிருந்த பெண்கள் கீழே இறங்கிவந்து, சாலையில் உள்ள சென்டர் மீடியனில் அமர்ந்திருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த மினி லாரி ஒன்று, வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில், சென்டர் மீடியனில் அமர்ந்திருந்த 7 பேர் மீது லாரி ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் துடிதுடித்து பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகில் உள்ள வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ள பாரத பிரதமர் மோடி, திருப்பத்தூர் சாலை விபத்தால் வேதனையுற்றேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்றும்,
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50000 பிரதமரின் தேசிய பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக நிவாரணம் வழங்கியப் பாரத பிரதமர் மோடிக்கு, அப்பகுதி மக்கள் கருணை உள்ளம் கொண்டவர் மோடி என புகழாராம் சூட்டியுள்ளார்.